

அகநக அகநக… முகநகையே… ஓஓஓ… உற்சாகமாகப் பாடிக் கொண்டே குழலி வந்தாள்.
என்ன சகோ... ஒரே உற்சாகம். பாட்டெல்லாம் சிறப்பா இருக்கு என்றவாறு அக்காவிடம் பேச்சுக்கொடுத்தான் சுடர்.
குழலி: ஆமா சுடர். இந்தப் பாட்டக் கேட்டியா? கேட்காம இருக்க வாய்ப்பில்ல. ஏன்னா பார்க்குற, கேட்குற இடங்கள்ல எல்லாம் இந்தப் பாட்டத் தான திரும்பத் திரும்பப் போடுறாங்க.
சுடர்: எனக்குத் தெரியல குழலி. நமக்குத்தெரிஞ்சதெல்லாம் வள்ளுவர் சொன்னதுதான். அவர் தான முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்புன்னு சொல்லியிருக்காரு.
குழலி: பரவாயில்லையே... உனக்குத் திருக்குறள்லாம் நினைவுக்கு வருது.
சுடர்: ஏன், இந்தப் பாட்டுல வர்ற அகநகவும் திருவள்ளுவர் சொன்ன அகநகவும் ஒன்னுதானா... கேட்க நல்லாருக்கு.
குழலி: அவர் நட்பைச் சொல்றாரு. இது காதலைச் சொல்ற பாட்டு. நம்ம தமிழோட அழகு அது. மொழியில எத்தன விதமான இலக்கண நயங்கள் இருக்கு தெரியுமா...
சுடர்: ஆமா. இந்தப் பாட்டுல என்ன இருக்கு சொல்லு.
குழலி: உங்களுக்கு ஐந்திலக்கணம் என்னெல்லாம்னு சொல்லித் தந்திட்டாங்களா...
சுடர்: ஐந்திலக்கணமா... நீயே சொல்லேன்.
குழலி: சரி. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்னு ஐந்து இலக்கண வகைகள் இருக்குன்னு தெரியுமில்ல.
சுடர்: எங்களுக்கு எழுத்து வகைகள், சொல் வகைகள் தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.
குழலி: இனிமேதான் உங்களுக்குப் பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் எல்லாம் சொல்லிக்கொடுப்பாங்க. தொடக்க நிலையில மொழியக் கத்துக்கிறவங்களுக்கு எழுத்தும் சொல்லும் தானே முக்கியம். அதோட இலக்கணத்தைச் சொல்லிக் கொடுத்துட்டுப் பிறகு தான் செய்யுள் பற்றிச் சொல்வாங்க.
சுடர்: ஓ... அப்படின்னா செய்யுளைப் பற்றித் தெரிஞ்சுக்கத்தான் பின்னாடி சொன்ன மூன்று இலக்கணமும் பயன்படுமா...
குழலி: ஆமாம் சுடர். ஆனா பொருள் இலக்கணம் செய்யுள் பற்றியது மட்டுமில்ல. நம் வாழ்வுக்கான இலக்கணத்தையும் சொல்லுது.
சுடர்: ஓ... அப்படின்னா, பொருள் இலக்கணம் படிக்கறதுக்கு ஆர்வமா இருக்கும்.
குழலி: ஆமா சுடர். அகம், புறம்னு நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் பொருள் இலக்கணம் சொல்லுது.
சுடர்: அகம், புறம்னா என்னக்கா?
குழலி: காதல், மண வாழ்க்கை சார்ந்த செய்திகளைப் பேசுறத அகம்னு சொல்வாங்க. போர் பற்றிய செய்திகளைப் பேசுறதப் புறம்னு சொல்வாங்க.
சுடர்: காதலிக்கறதுக்கும், சண்டை போடுறதுக்கும்கூட இலக்கணம் இருக்கா...
குழலி: ஆமா சுடர். இப்போ திருமணச் சட்டங்கள் இருக்கு. போர் ஒழுங்குமுறைகள் இருக்கு. அந்தக் காலத்திலும் இருந்தது. போர் எப்படித் தொடங்கும், அடுத்த அடுத்த நிலைகள் என்ன, யார் எந்த மாலை அணிந்து போர் செய்வாங்க, போர் வெற்றிய எப்படிக் கொண்டாடுவாங்க, போர்ல இறந்தவர்கள எப்படி நடுகல்லா வழிபடுவாங்க... இப்படி எல்லாத்தையும் புற இலக்கணங்கள் சொல்லியிருக்கு.
சுடர்: ஓ... இதுவெல்லாம் இலக்கணத்தில் இருக்கா.. அப்ப காதல் வாழ்க்கை பற்றியும் இதே போல சொல்லியிருக்காங்களா...
குழலி: ஆமாம் சுடர். காதல் வாழ்க்கை எப்படி இருக்கும், ஓர் ஆணும் பெண்ணும் எப்படி, எந்தச் சூழலில் காதல் வயப்படுறாங்க, சந்திப்பை உருவாக்குறாங்க, குடும்பம் இந்தக் காதலை ஏற்கிறபோதும், ஏற்காத போதும் என்ன நடக்கும், எப்படிப் பிரியுறாங்க, இதில் தோழியும் தோழனும் என்ன பங்கு வகிக்கிறாங்க இப்படி எல்லாவற்றையும் அக இலக்கணங்கள் பேசியிருக்கு...
சுடர்: ஆமா, ஐந்திணைகள்னு சொல்வாங்களே, அதுக்கும் நீ பேசின செய்திகளுக்கும் தொடர்பிருக்கா...
குழலி: நிச்சயமாத் தொடர்பிருக்கு. அதைப் பற்றிப் பேச நிறைய இருக்கு... சரி வா... சாப்பிடுவோம். இன்னொரு நாள் விரிவாப் பேசுவோம்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்.
தொடர்புக்கு: janagapriya84@gmail.com