

அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் "எழுதுக" இயக்கத்தின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள் சுமார் 150 புத்தகங்கள் எழுதியுள்ளனர்.
இந்த படைப்புகள் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சிறார்கள், இளைஞர்கள் என இரு தொகுப்புகளாக வெளியிடப்படவுள்ளன.
செல்போனில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள் மத்தியில் புத்தகம் எழுதும் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களின் எழுத்தாற்றலை வெளிக் கொண்டு வருவதற்காக
தொடங்கப்பட்ட தன்னார்வ அமைப்புதான் "எழுதுக" எனும் புத்தகம் எழுதும் இயக்கம்.
எல்லாம் ஆன்லைன்
2021-ம் ஆண்டு கரோனா காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், விஞ்ஞானி, தனியார் துறை அதிகாரி, சமூக ஆர்வலர் உள்ளிட்டோரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அந்தாண்டு கரோனா காலம் என்பதால் மாணவர், ஆசிரியர் என பலரும் வீட்டிலிருந்தனர். அதனால்
பேப்பரில் எழுதி புத்தகம் தயாரிப்பு அல்லது கணினி மையத்திற்கு சென்று டைப் செய்து புத்தகம் உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாமல் இருந்தது. அனைத்தும் ஆன்-லைன் மூலமே நடைபெற்றது. அதுபோலவே ஆன்-லைன் மூலமாகவே புத்தகம் தயாரிப்பது என்று எழுதுக இயக்கம் சிந்தித்தது. அதன்படியே புத்தகம் எழுத ஆர்வமாக இருந்தவர்களிடம் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறுதல் தொடங்கி புத்தகம் தயாரிப்பு வரை அனைத்தையும் செல்போன் வழியாக செய்து முடித்தனர். அப்போது350 பேர் புத்தகம் எழுத ஆர்வம் இருப்பதாக ஆன்-லைனில் பதிவு செய்தனர். பின்னர் வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறுதலைப்புகளில் புத்தகம் எழுதினர். அந்தபுத்தகங்களை 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இளம்படைப்பாளர்கள்
இதுகுறித்து "எழுதுக" இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ம.த.சுகுமாறன், வே.கிள்ளிவளவன் ஆகியோர் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்களின் எழுத்தாற்றலை வெளிக் கொண்டு வருவதே எங்கள் இயக்கத்தின் நோக்கமாகும். மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள், பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 2021-ல்விண்ணப்பப் பதிவு முதல் புத்தகம் வெளியீடு வரை அனைத்து பணிகளையும் 42 நாட்களிலே முடித்தோம்.
இந்தாண்டு விண்ணப்பப் பதிவு ஏப்.24-ல் தொடங்கியது. மே மாதத்தில் முடிக்க திட்டமிட்டோம். பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனதால் மேலும் 10 நாட்கள் வரை அவகாசம் அளித்தோம். இப்போது இறுதிக்கட்ட பணிகளும், புத்தக வெளியீட்டுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் பணம், பொருளாதாரம், கட்டணம் எதுவும் கிடையாது. புத்தகம் எழுதும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் எழுத்தாளரை உருவாக்கிவிடுவோம்.
இந்தாண்டு புத்தகம் எழுத 600 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 210 பேர் தேர்வு செய்யப்பட்டு வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் புத்தகம் எழுதினர். ஆன்லைனில் அளிக்கப்பட்ட பயிற்சியின்படி, மாணவர்கள் தாங்கள் எழுதுவதை வாட்ஸ் அப்பில் அனுப்புவார்கள். அதனை வழிகாட்டி ஆசிரியர்கள் படித்துப் பார்த்து நெறிப்படுத்துவார்கள். சொந்த நடையில் எழுத ஊக்குவிப்பார்கள். புத்தகத்தின் குறைந்தபட்ச பக்கம் 32, அதிகபட்ச பக்கம் 96.
150 புத்தகங்கள்
புத்தகம் எழுத தேர்வான 210 பேரில் சிலர் தவிர்க்கமுடியாத காரணங்களால் புத்தகம் எழுதவில்லை. 150 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் 75-வது சுதந்திரதினத்தையொட்டி தலா 75 வீதம் சிறார்கள், இளைஞர்களின் இரு தொகுப்பு புத்தகங்களாக வெளியிடவுள்ளோம்.
புத்தகம் எழுதுபவர்களில் செங்கல்பட்டு மாவட்டம், தனியார் பள்ளியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவர் பா.ஹர்ஷாகுமார் தான் குட்டி எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், மண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதலைமை ஆசிரியை இரா.சுப்புலட்சுமிதான் மிக மூத்த எழுத்தாளர்.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
புத்தக வாசிப்பும், புத்தக வெளியீடும் குறைந்துவரும் இக்காலத்தில் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் எழுத்தாற்றலை ஊக்குவித்து இளம் படைப்பாளர்களை உருவாக்கும் "எழுதுக" இயக்கத்தின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.