Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

குறைந்த மின்னழுத்த பிரச்சினை: ஓராண்டு போராட்டத்துக்கு பிறகு தீர்வு

மின்சார தீர்ப்பாயத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மின் நுகர்வோர் ஒருவர், குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி நடேசன் நகரைச் சேர்ந்தவர் பி.முத்துசாமி. இவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் மூன்று வீட்டு மின் இணைப்புகள் வைத்துள்ளார். இந்த இணைப்பில் 220 வோல்ட் மின்சாரம் கிடைப்பதற்குப் பதில், வெறும் 180 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதனால் மின்சாதனங்கள் பழுதாகின.

மின்னழுத்தக் குறைவை சரி செய்யக் கோரி, கடந்த ஆண்டு ஜூலையில் மின்துறை உதவிப் பொறியாளரிடம் மனு செய்தார். அவர் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்து மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, சென்னை மின் பகிர்மானக் கழக தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இயங்கும் மின் குறை தீர்வு மையத்தில் முத்துசாமி புகார் அளித்தார்.

ஆனால், குறை தீர்வு மையத்துக்கான உறுப்பினர்களில் ஒருவரது பணியிடம் காலியாக இருந்ததால், அவரது மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு மின்சார குறை தீர்ப்பாயத்தில் முத்துசாமி மனு செய்தார். குறைதீர் மையத்தில் முறையாக விசாரிக்காததற்கும் மின்துறை நடவடிக்கை எடுக்காததற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை குறை தீர்ப்பாளர் ஏ.தர்மராஜ் விசாரித்தார். அப்போது சென்னை தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆஜராகி, தீர்ப்பாயத்தின் முன் விளக்கம் அளித்தார்.

‘‘மனுதாரர் வசிக்கும் பகுதியில், புதிதாக 250 கே.வி. திறனுள்ள புதிய மின் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் மின்னழுத்தம் பரிசோதிக்கப்பட்டு, முழுமையாக 220 வோல்ட் வருவதை உறுதி செய்துள்ளோம்’’ என்றார்.

மேலும், மின் மாற்றி புதிதாக வைப்பதற்கு இடப்பிரச்னை ஏற்பட்டது. குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளின் முன்பு, மின் மாற்றி வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பழைய மின் மாற்றி அருகிலேயே புதியதையும் அமைத்துள்ளோம். அதனால்தான் மின்னழுத்த பிரச்சினையை சரிசெய்ய காலதாமதமானது என்று மின் துறை சார்பில் பதிலளித்தனர். மின்னழுத்த பிரச்சினை சரியானதால் நிவாரணம் தரத் தேவையில்லை என்று புகார்தாரர் விட்டுக் கொடுத்தார். இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து, மின் துறை மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுமக்கள் தங்களது மின்சார பிரச்சினைகளுக்கு, மின் குறை தீர்வு மையம் மற்றும் குறை தீர்ப்பாயத்தில் புகார் அளித்து தீர்வு பெறலாம்’’ என்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x