

குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், விஸ்டாடோம் எனப்படும் கண்ணாடி பெட்டியில் இயற்கையை ரசித்தபடி சென்ற பயணிகள்.
தென்காசி: மதுரையில் இருந்து தென்காசி வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், விஸ்டாடோம் எனப்படும் கண்ணாடி பெட்டி நேற்று முதல் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தென்காசியில் இருந்து செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு, புனலூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்லும் வழியில் உள்ள பசுமைமாறாக் காடுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், சோதனை ஓட்டமாக ஒரே ஒரு விஸ்டாடோம் கண்ணாடி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியுடன் கூடிய இந்த கண்ணாடி பெட்டியில், பெரிய கண்ணாடி ஜன்னல்கள், கண்ணாடி கூரை மற்றும் 360 டிகிரி சுழலும் இருக்கைகளுடன், மொத்தம் 44 இருக்கைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய இயற்கை காட்சிகளை ரசிக்க இது வழிவகை செய்கிறது.
புளியரை முதல் ஆரியங்காவு, கழுதுருட்டி, புனலூர் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்லும்போது, இருபுறங்களிலும் காணப்படும் பசுமையான மலைகள், இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட காட்சிகளை ரசித்தபடியே பயணிக்க முடியும். இதனால் இந்தப் புதிய ரயில் பெட்டி பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கண்ணாடி பெட்டியில் முதல் நாளிலேயே முன்பதிவு செய்து தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் பயணம் மேற்கொண்டார். புதிய ரயில் பயணம் குறித்து அவர் கூறுகையில், “விஸ்டாடோம் கண்ணாடி பெட்டி பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயற்கை காட்சிகளை ரசித்தபடியே பயணம் செய்வது மனதுக்கு இதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
எதிர்காலத்தில் கண்ணாடி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். விஸ்டாடோம் கண்ணாடி பெட்டி ரயில் சேவைக்கு, இரு மாநில மக்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ள நிலையில், இப்பெட்டிக்கான முன்பதிவு ஜனவரி மாதம் வரை நிறைவடைந்துள்ளது.