

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டத்தை இன்று நேரில் பார்வையிட்டேன். மலர்கள் முழுமையாக மலர்வதற்கு இன்னும் 7 முதல் 8 நாட்கள் ஆகும். என்ற போதிலும், தோட்டம் முழுவதும் இப்போதே வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் மேற்பார்வை குழுவினர் மிகச் சிறந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காஷ்மீர் தோட்டக்கலைத் துறை இயக்குநர் மதுாராமசூம் கூறுகையில், "இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் மார்ச் 16-ம் தேதி (இன்று முதல்) பொதுமக்களுக்காகத் திறக்கப்படும். இந்த ஆண்டு 70-க்கும் மேற்பட்ட வகைகளில் சாதனை அளவாக 18 லட்சம் துலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இத்தோட்டத்தில் துலிப் மலர்கள் மட்டுமின்றி டஃபோடில்ஸ், ஹைசின்த்தஸ், ரோஜாக்கள் உள்ளிட்ட பல்வேறு மலர் வகைகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூத்துக் குலுங்குகின்றன.