உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழக அளவில் திருச்சி முதலிடம்!

2025-ம் ஆண்டில் 3,13,17,745 பேர் வருகை
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழக அளவில் திருச்சி முதலிடம்!
Updated on
2 min read

திருச்சி: 2025-ம் ஆண்டு தமிழகத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் 6-ம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சேகரித்த புள்ளி விவர தரவுகளின் அடிப்படையில், 2025-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆன்மிக தலங்கள், சுற்றுலாத் தலங்கள், தொன்மை வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் ஆகியவற்றை பார்வையிட பெருமளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதில், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, திருப்பட்டூர், திருவெள்ளறை ஆகிய இடங்களில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

மேலும், முக்கொம்பு மேலணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா ஆகியவற்றுக்கும் கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2025-ம் ஆண்டு தமிழக சுற்றுலாத் துறை புள்ளிவிவரப்படி திருச்சி மாவட்டத்துக்கு 3,13,17,745 பேர் வருகை தந்துள்ளனர். திருச்சிக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் 2,67,83,635 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் 2,62,44,694 சுற்றுலா பயணிகள் வருகையுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

2025-ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை, மதுரை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் முறையே 1 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

சென்னைக்கு 2,60,411 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர். மதுரைக்கு 2,40,056 பேரும், செங்கல்பட்டுக்கு 2,37,045 பேரும் வருகை புரிந்துள்ளனர். திருச்சி மாவட்டத்துக்கு 1,71,345 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததன் அடிப்படையில் மாநில அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் பால முருகன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: சுற்றுலாத் துறையினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆன்மிகம், சுற்றுலா, தொல்லியல் சிறப்புமிக்க இடங்களில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் 2025-ம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டைவிட பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. சாலை, ரயில், விமானப் போக்குவரத்து வசதி, வாடகை மற்றும் பொது போக்குவரத்து வாகன வசதி, தண்ணீர் வசதி, அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் உள்ளிட்ட காரணங்களால் திருச்சி்க்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழக அளவில் திருச்சி முதலிடம்!
மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in