

இ-பாஸ் நடைமுறை உள்ளிட்ட காரணங்களால், ஊட்டி படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கோடை கால 'சீசன்' மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சி மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான வர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி ஏரியில் செயல்படும் படகு இல்லத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த படகு இல்லத்தில், 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள் இயக்கப்படுகின்றன. படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யலாம். படகு சவாரியின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங் களையும், மான் பூங்காவில் உள்ள கடமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்க முடியும்.
மேலும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லத்தில் தனியார் மூலம் மினி ரயில் மற்றும் பிற விளையாட்டு உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. படகு சவாரி முடிந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி சென்று மகிழ்கிறார்கள்.
ஊட்டி படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குறைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால்,சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து படகு இல்ல அதிகாரிகள் கூறும் போது, "கரோனா நேரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில், 2023-ம் ஆண்டு முதல் மீண்டும் அதிகரித்தது... இதன்படி, 2023-ம் ஆண்டு 23.91-லட்சம் பேரும், 2024-ம் ஆண்டு 23.16 லட்சம் பேரும் ஊட்டி படகு இல்லத்திற்கு வந்து படகு சவாரி மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு 19.66 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே படகு சவாரிக்கு வந்து சென்றுள்ள னர். இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருக்கலாம்” என்றனர்.