ஊட்டியில் ரூ.2.17 கோடியில் அறிவியல் பூங்கா!
ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 20-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. பூங்கா பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் பராமரிப்பின்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், ஊட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் பூங்காவும் ஒன்று. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவியல் பூங்கா தொடங்கி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அம்பேத்கர் பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் எம்.கணேசன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் அறிவியல் பூங்கா இல்லை. எனவே, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்றும் பணிகள் ஊட்டி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகின்றன. ரூ.2.17 மதிப்பில் அமைக்கப்படும் இப்பூங்காவில், இயற்பியல், உயிரியியல் மற்றும் வான்வெளியியல் தொடர்பான அறிவியல் மாதிரி உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பூங்காவின் உட்பகுதியில் நியாண்டர்தால் மனிதர்களின் மாதிரிகள், டைனோசர்ஸ், சிம்பன்ஸி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ராக்கெட்களின் மாதிரிகள், ஸ்விங் பெண்டுலம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதுதவிர செயல்பாடுகள் மூலம் கற்றுக் கொள்ளும் வகையில் 27 வகையான அறிவியல் படைப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சிக்கான பாதைகளும் அமைக்கப்படுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் பூங்காவை பார்வையிடலாம். பேருந்து நிலையத்துக்கு அருகே இருப்பதால் பலருக்கும் பூங்கா பயனுள்ளதாக இருக்கும். அடுத்த ஒரு சில நாட்களில் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.
