படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் குமரகிரி ஏரி பூங்கா திறப்பு - என்ன ஸ்பெஷல்?
சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி பூங்காவை சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் குமரகிரி ஏரி பூங்காவை திறந்து வைத்து பேசியது: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி சுற்றுலாத் தளாமக்க நடவடிக்கை மேற்கொண்டு, 40 ஏக்கர் பரப்பளவில் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியினை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுற்றுப் புறச்சுவர்கள், 2 நுழைவாயில்கள், ஏரியை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரூ.14 கோடி மதிப்பில் ஏரியைச் சுற்றி கழிவு நீர் உள்ளே நுழையா வண்ணம் திசை திருப்பும் கால்வாய் பணி முடிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் பொதுமக்கள் அமர்வதற்கான 25 இருக்கை வசதி, பசுமை புல்தரைகள், குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்கு பொம்மைகள், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, சுகாதார வளாகம், கேன்டீன் வசதி. ஏரியில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்கு வசதியாக படகுகள் போன்ற பல்வேறு வசதிகள் ஏரியில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதா தேவி, மண்டலக் குழுத் தலைவர் தனசேகர், மாமன்ற உறுப்பினர் திருஞானம் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
