

ஊட்டி: ஊட்டியில் ரோஜா கண்காட்சியை முன்னிட்டு 2 லட்சம் ரோஜாக்களை கொண்டு அன்னப்பறவை உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில், 21-வது ரோஜா மலர் கண்காட்சி இன்று (மே 14) முதல் 5 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, பூங்காவில் 4 ஆயிரம் வகைகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வண்ண ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தவிர, ஆண்டுதோறும் ரோஜா கண்காட்சியின்போது, சிறப்பு அம்சமாக ஏதாவது ஒரு பொருளை மையப்படுத்தி அது குறித்த உருவங்கள் பூங்கா வளாகத்துக்குள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த முறை, பறவையினங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ரோஜா பூங்கா உதவி இயக்குநர் பைசல் கூறும்போது, ‘‘21-வது ரோஜா கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோஜா மலர்கள் பூத்து தயார் நிலையில் உள்ளன. சிறப்பு அம்சமாக கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில், 2 லட்சம் ரோஜா மலர்களால் அன்னப்பறவைகள், இருவாச்சி, புல்புல், தேன்சிட்டு, உள்ளிட்ட பறவைகளின் உருவம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்’’ என்றார்.