

குல்மார்க்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள குல்மார்க் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. குளிர்கால அதிசய உலகமாக கருதப்படும் குல்மார்க்கில் உலகின் உயரமான சுழலும் உணவகத்தை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்த உணவகம் அபர்வாட் சிகரத்தில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. அத்துடன் ஆசியாவின் மிக நீளமான ஸ்கை இழுவை லிப்டும் அங்கு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள், குளிர்கால விளையாட்டு மற்றும் சொகுசுப் பயணத்துக்கான முதன்மையான இடமாக குல்மார்க்கின் நற்பெயரை உயர்த்துவதாக உள்ளன. இந்த மேம்பாடுகள் குல்மார்க்கின் சுற்றுலா உள்கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சுழலும் உணவகம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அங்கு பனி மூடிய மலைகளின் பரந்த காட்சிகளை ரசித்துக் கொண்டே, மணம் மிக்க காஷ்மீரி கஹ்வா மற்றும் சுவையான உணவுகளை அனுபவிக்கலாம்.
இந்தச் சூடான, வசதியான உணவகம் மெதுவாகச் சுழல்கிறது. உணவு உண்பவர்களுக்கு மூச்சடைக்க வைக்கும் இமயமலைக் காட்சிகளைத் தடையின்றிப் பார்க்க வாய்ப்பளிக்கிறது.
குல்மார்க் நகரம் ஏற்கெனவே பல உலக சாதனைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, உலகின் மிக உயரமான கோண்டோலா மற்றும் ஸ்கை முனை, ஆசியாவின் மிக நீளமான ரோப்வே மற்றும் உலகின் மிகப்பெரிய பனிக்கூண்டு உணவகம் ஆகியவற்றைச் சொல்லலாம்.