

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த மேரிகோல்டு உள்ளிட்ட மலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. படம்: ஆர்.டி.சிவசங்கர்.
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-ம் சீசனுக்காக நடவு செய்யப்பட்ட மலர்த் தொட்டிகளில் மேரிகோல்டு உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைசீசனை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா காட்சி,குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன.
இதேபோல, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனுக்கு வட மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தோட்டக்கலைத் துறை மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகளில் மேரிகோல்டு, டேலியா, டெய்சி, கேலண்டுல்லா உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பூங்கா நுழைவு வாயில், ஜப்பான் பூங்கா போன்ற பகுதிகளிலும் 4 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் பூங்காவில் அலங்கார செடிகள் கொண்டு ‘ஐ லவ் ஊட்டி’ போன்ற அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 35 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இரண்டாம் சீசனுக்காக நடவு செய்யப்பட்ட தொட்டிகளில் தற்போது மலர்கள் பூக்கத்தொடங்கியுள்ளன. குறிப்பாக, மேரிகோல்டு மற்றும் சால்வியா மலர்கள் பூத்து குலுங்குவதை தொலைவில் இருந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
விஜயதசமி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறைகள் வரவுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் இரண்டாம் சீசனுக்காக தயார்படுத்தப்பட்ட தொட்டிகள் மாடங்களில் அடுக்கி வைத்து, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.