

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மலைப்பாதையில் 90% பணிகள் நிறைவு பெற்றதால், போக்குவரத்துக்காக சாலை திறக்க தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக கே.எம்.எஸ் பகுதி அருகே மரங்களுடன் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும், நந்தகோபால் பாலம் அருகில் ராட்சத பாறை சாலையில் விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண், பாறைகளை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததன் காரணமாக வரும் 4-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.