

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளத்துறை, சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தபோது, சுற்றுலாத் துறை தொடர்பாக பதிலளித்து அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை ரூ.13 கோடி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை ரூ.19 கோடி, கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பிஅணை ரூ.9 கோடி, ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை ரூ.7 கோடியில் பூங்காமேம்பாடு மற்றும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி, தேங்காய்பட்டணம், குளச்சல் கடற்கரை உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூ.18 கோடி திட்ட மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல், கடலோர சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் சொகுசு படகு சுற்றுலாத் திட்டம் ஆகியவற்றை சென்னை - கோவளம், பூம்புகார்-தரங்கம்பாடி நாகப்பட்டினம், ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரி போன்ற வழித்தடங்களில் அறிமுகப்படுத்த சாத்தியக்கூறு அறிக்கைகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
ராமநாதபுரம், குற்றாலத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரூ.33.80 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைக்கப்படும். படகு இல்லங்களில் பயன்படுத்தப்படும் இயந்திர படகுகள் ரூ.17.82 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக மின்படகுகளாக மாற்றி அமைக்கப்படும்.
மாமல்லபுரம், ராமேசுவரம், திருச்செந்தூர், கிருஷ்ணகிரி, ஏற்காடு, மதுரை ஆகிய தமிழ்நாடு சுற்றுலா தங்கும் விடுதிகளிலும், உதக மண்டலம், பைக்காரா ஆகிய படகு இல்லங்களிலும் இ-சார்ஜிங் நிலையங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் கடற்கரை பகுதியில் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்த சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும். இந்தியாவின் முன்னணி MICE நகரமாக சென்னையை உயர்த்திட‘chennai MICE promotion bureau’ என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் 59 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் சுற்றுலாத்துறை - சுற்றுலா வளர்ச்சிகழகத்தின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்கது’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.