

கொடைக்கானல் மன்னவனூரில் பறக்க விடப்பட்ட ராட்சத பட்டங்களை பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்.
பழநி: கோடை விழாவையொட்டி கொடைக்கானல் அருகே மன்னவனூரில் நடைபெற்ற காற்றாடி திருவிழாவில் பறக்க விடப்பட்ட பலவிதமான பட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஏரிப்பகுதியில் ராட்சத பட்டம் பறக்கவிடும் திருவிழா நேற்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் தேசியக் கொடியின் வண்ணம், கார்ட்டூன் பொம்மைகள், விலங்குகள், பறவைகள் என பல விதமான ராட்சத பட்டங்கள் பறக்க விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வானத்தில் பறந்த வண்ணமயமான பட்டங்களின் அழகை கண்டு ரசித்தனர். மே 26-ம் தேதி வரை பட்டம் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெறும்.