

மரகத பூங்கா வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பூங்கா.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பழைய சிற்பக் கல்லூரியின் எதிரில் மரகத பூங்கா வளாகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிரும் தோட்டம், தொல்லியல்துறையின் ஒப்புதலை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் திறக்கப்படாமல் உள்ளது.
பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களாக விளங்கும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட குடவரை சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், கூடுதலாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து தனியார், பொது பங்களிப்புடன் ரூ. 8 கோடி மதிப்பில் மாமல்லபுரம் பழைய சிற்பக்கல்லூரி சாலையில் உள்ள 2.47ஏக்கர் பரப்பளவில் உள்ள மரகத பூங்காவில், 10 லட்சம் மின் விளக்குகளால் ஒளிரும் பூக்கள், மரங்கள், செல்பி எடுக்கும் இடங்கள்.
செயற்கை நீரூற்று, மினி 3டி, 5டி சினிமா அரங்கம், ஒளிரும் நீர் பூங்கா, சிறுவர்களுக்கான மினி ரயில் மற்றும் பல் வகை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மான், முயல், ரோஜா தோட்டம் உட்பட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒளிரும் பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளதால் மேற்கண்ட பூங்கா விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு தயாராக உள்ளது. இதன்மூலம், கூடுதலான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வரக்கூடும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொல்லியல்துறையின் 100 மீட்டர் வரையறுக்கப்பட்ட பகுதியில் ஒளிரும் பூங்கா அமைந்துள்ளதால், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு துறை சார்ந்த ஒப்புதல் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தொல்லியல்துறையின் ஒப்புதல் பெறமுடியாமல் பூங்காவை பயன்பாட்டுக்கு திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுலாத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஒளிரும் தோட்டத்தை திறப்பதற்காக தொல்லியல்துறையின் ஒப்புதல் பெறுவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் திறப்பு விழாவுக்கான அறிவிப்புகள் வரும் என நம்புகிறோம்.