

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று ஆயிரக் கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்ததால், அப்பகுதி முழுவதும் திருவிழா போல காணப்பட்டது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. ஒகேனக்கல்லில் வழக்கமாக கோடைகாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும். அதேபோல விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் அருவிகள், தொங்குபாலம், நடை பாதைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. வெளியூர் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டும், மீன் குழம்புடன் உணவு உண்டும் மகிழ்ந்தனர். இது தவிர பெரும்பாலான பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதுவரையிலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடரும் வாய்ப்புள்ளது.