

சென்னை: மைசூர் பூங்காவிலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு புது வரவாக 2 கரடி குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இப்பூங்காவில் இனப்பெருக்கம் செய்த விலங்குகளைக் கொடுத்து, இங்கு இல்லாத விலங்குகள் பிற பூங்காக்களிலிருந்து பெறப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஏற்கெனவே வண்டலூர் பூங்காவுக்கு சிங்கம், செந்நாய், வங்கப் புலி, மண்ணுளி பாம்பு ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக வெள்ளைப் புலி, நெருப்புக் கோழி ஆகியவற்றை வண்டலூர் பூங்கா வழங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மைசூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி கரடி குட்டிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுக்கு கோடைக் காலத்தில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கக் காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மாற்றாக வண்டலூர் பூங்கா சார்பில் 3 ஜோடி நெருப்புக் கோழிகள் மைசூர் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது கோடைக் காலம் என்பதால், அவற்றுக்கு மன அழுத்தம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மைசூரிலிருந்து இந்த கரடிகளை வாகனத்தில் கொண்டுவரும்போது, இரவில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட உள்ளன.