

சேலம்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் கோடை விழா, மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி, 5 லட்சம் மலர்களைக் கொண்டு பல்வேறு மலர்ச் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்து, மலர்க் கண்காட்சியை பார்வையிட்டனர்.
எம்பி பார்த்திபன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் காய்கறிகள், கனிகள் ஆகியவற்றைக் கொண்டு அலங்கார வளைவுகள் மற்றும் ஏரிக் கரைகளில் டெலிபோன் பூத், ஹார்ட்டின் வடிவ செல்ஃபி பாயின்ட்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ஏரிப்பூங்கா உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மேலும், அண்ணா பூங்காவில், பொன்னியின் செல்வன் திரைப்பட அன்னப் படகு, டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீ உள்ளிட்ட மலர்ச்சிற்பங்கள் ரோஜா, ஜெர்பைரா, ஆந்தூரியம், டேலியா, சில்வியா, மேரி கோல்ட் உள்ளிட்ட வகைகளில் 5 லட்சம் மலர்களை கொண்டு அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன.
கோடை விழாவையொட்டி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர். இதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் ஆங்காங்கே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகள், அவற்றை செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே, சிறிது நேரம் பெய்த மழை, ஏற்காட்டில் குளிர்ச்சியை பரவச் செய்தது.
கோடை விழாவையொட்டி, ஏற்காட்டில் அனைத்துத் துறைகள் சார்பில் பணி விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையேற்றம், விளையாட்டுப் போட்டிகள், நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளன. வரும் 28-ம் தேதி வரை கோடை விழா, மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது.