Published : 21 May 2023 01:11 PM
Last Updated : 21 May 2023 01:11 PM

குமரியில் அடிக்கடி தடைபடும் படகு சவாரி - டோக்கன் முறை அமலானால் சிரமம் குறையும்

நாகர்கோவில்: கோடை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை காண ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும், கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து திகழ்கிறது. இங்கு கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம் போன்ற நேரங்களில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவது வழக்கம்.

கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். நேற்றும் கடல் மட்டம் தாழ்வு எனக்கூறி சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக படகு சேவை தொடங்கியது. இதனால் சன்னதி தெரு மற்றும் சாலை வரை சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வெயில் சுட்டெரித்த நிலையில் குடைகள் உதவியுடனும், துணியால் தலையை மூடியவாறும் வரிசையில் நின்றிருந்தனர். இதுபோன்ற நேரங்களில் படகு இல்லத்தில் டோக்கன் முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். குறிப்பிட்ட நேரத்தை சொல்லி டோக்கன் வழங்கினால், சுற்றுலா பயணிகள் அந்த நேரத்தில் படகு சவாரிக்கு வருவர்.

வரிசையில் காத்திருக்கும் அவசியம் இருக்காது. இதை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் நடைமுறைப்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வட்டக்கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, உதய கிரிகோட்டை, சிதறால் மலைக்கோயில் போன்ற இடங்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அதிகமிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x