

சேலம்: ஏற்காடு கோடை விழா 46வது மலர் கண்காட்சி நாளை மாலை 5 மணிக்கு துவங்குவதை முன்னிட்டு, மலைப்பாதையில் அனைத்து வகை வாகனங்களும் செல்ல அனுமதி வழங்கி ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சியை நாளை மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கா.ராமச்சந்திரன், மா.மதிவேந்தன் தொடங்கி வைக்கின்றனர். இந்த மலர் கண்காட்சியில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது. மேலும், அரசு துறை சார்பில் 46 அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் செயல்திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம் பெற்றுள்ளது. நாளை முதல் வரும் 28ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு மலர் கண்காட்சி நடக்கிறது.
ஏற்காடு மலைப்பாதையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சில வாரங்களாக சாலை சீரமைப்புப் பணி நடந்து வந்த நிலையில், சாலை சீரமைப்புபணி முழுமையாக நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இன்று பிற்பகல் 2 மணி முதல் அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்வதற்கு இரண்டு சக்கர, இலகு இரக மற்றும் கன ரக வாகனம் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியையொட்டி ஒருவழிப் பாதையாக அஸ்தம்பட்டி - கோரிமேடு செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது. ஏற்காடுக்கு செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக சென்று, ஏற்காடு - குப்பனூர் சாலை வழியாக மீண்டும் கீழிறங்கும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.