

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 125-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. ஏறத்தாழ 50 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில் உருவம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இதன்சிறப்பம்சமாக ரோஜாக் காட்சி,மலர்க் கண்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவை விளங்குகின்றன.
உலகப் பிரசித்தி பெற்ற உதகை மலர்க் கண்காட்சியைக் காண, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலர்க் கண்காட்சியை ரசித்துச் செல்வார்கள்.
இதன்படி, 125-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.
இதில், உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, நீலகிரி மாவட்டத்தைக் கண்டறிந்த ஜான் சலீவனின் வாரிசுகள் ஓரியன் சலீவன், ஜோஸ்லின் சலீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அலங்காரங்கள்: மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக 50,000 கார்னேஷன் மலர்களைக் கொண்டு, 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள, தேசியப் பறவை மயில் அலங்காரம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது.
மேலும், உதகை உருவான 200-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் `ஊட்டி 200' வடிவம், தமிழ்நாடு அரசின் திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மஞ்சப்பை, சர்வதேச சிறு தானியஆண்டை முன்னிட்டு விழிப்புணர்வுச் சின்னம், அங்கக வேளாண்மையை ஊக்கமளிக்கும் கோ-ஆர்கானிக் அலங்காரம், செல்பி ஸ்பாட் உள்ளிட்ட மலர் வடிவங்கள் 30,000-க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பூங்கா உருவாக்கப்பட்டு 175 வருடங்களானதைக் குறிக்கும் வகையிலான உருவம், 125-வது மலர்க் கண்காட்சியின் உருவம் ஆகியவையும் பார்வையாளர்களைக் கவர்கிறது.
குறிப்பாக, சிறுத்தை, டால்பின், பாண்டா கரடி, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், கடற்பசு, தமிழ் மரவன் பட்டாம்பூச்சி, மரகதப் புறா, வரையாடு, பனைமரம், பரதநாட்டியக் கலைஞர் மற்றும் செங்காந்தள் மலர் போன்ற வடிவமைப்புகள் 70,000 வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மலர்க் கண்காட்சித் திடலில் 30 வகையான ஹெலிக்கோனியா கொய்மலர்களும், வில்லியம்மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியின் சிறப்பம்சமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்ச் செடிகள் மற்றும் வெவ்வேறு வகையான மலர்களும் இடம் பெற்றுள்ளன. அதேபோல, 125 நாடுகளின் தேசிய மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி மாளிகையில் வண்ண அலங்காரத் தொட்டிகள், சுற்றுலாப் பயணிகளைக் வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, மலர்க் கண்காட்சியில் பல்வேறு காட்சித் திடல்கள் அமைக்கப்பட்டு, நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் முக்கியக் குறிக்கோளான இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மைக் காட்சித் திடல், தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தைக் குறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த காட்சித் திடல்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் நீலகிரி எம்.பி. பார்வையிட்டு, பாராட்டுத் தெரிவித்தனர்.