

உதகையை அடுத்துள்ள பைக்காரா அணையில் படகு சவாரி மேற்கொள்ளப் படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே உள்ள இந்த அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் ஏறிச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதகையில் இருந்து 22 கி.மீ., தொலையில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன.
இது தவிர, உதகை - மைசூரு சாலையில் 13 கி.மீ., தொலைவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி, குன்னூர் - குந்தா செல்லும் சாலையில் காட்டேரி நீர் வீழ்ச்சி, உதகை - கூடலூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சி, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மாயாறு நீர் வீழ்ச்சி என பல நீர் வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.