

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 623 மீட்டர் உயரம் கொண்டது. இங்கிருந்து நீலகிரியின் பெரும்பாலான இடங்களை காணமுடியும். குறிப்பாக, சூரியன் மேற்கில் மறைவதை காண இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். தொட்டபெட்டா சிகரம் உதகையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது. இதனை தனியார் கார்கள், சுற்றுப் பேருந்துகளில் சென்று காண முடியும்.
முதுமலை: ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ள இடம் தான் முதுமலை புலிகள் காப்பகம். முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி மற்றும் ஜங்கிள் ரெய்டு ஆகியன உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகளை வனத்துறை அழைத்துச் சென்று யானை, புலி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகளை காண்பித்து வருகின்றனர். முதுமலைக்கு மைசூரில் இருந்து எளிதாக வர முடியும்.
கோவை, சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உதகை வந்த பின், உதகையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடி பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து கூடலூர் செல்லும் அரசுப் பேருந்துகளின் மூலம் தெப்பக்காடு பகுதிக்கு சென்று முதுமலையை கண்டு ரசிக்கலாம். மேலும், மசினகுடி பகுதியில் உள்ள தனியார் வாகனங்களில் முதுமலை சென்று அங்குள்ள இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.
சமீபத்தில் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வளர்க்கப்படும் யானைகளை பார்த்து மகிழ்ந்ததுடன், அவருக்கு கரும்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் அளித்தார். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம் பெற்ற யானைக்குட்டிகளை பார்த்த பிரதமர், அந்த யானைகளை வளர்த்த பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோரையும் சந்தித்தார்.