உதகையில் அதிகம் கவனம் பெறாத 3 சுற்றுலா தலங்கள்!

உதகையில் அதிகம் கவனம் பெறாத 3 சுற்றுலா தலங்கள்!
Updated on
1 min read

கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், விடுமுறையை கழிக்க நம்மில் பலர் சுற்றுலா கிளம்பி விடுவோம். பணம் படைத்தவர்களுக்கு காஷ்மீர், டார்ஜிலிங் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு மலைகளின் அரசி உதகையும், மலைகளின் இளவரசி கொடைக்கானலும் தான் உடனடி சாய்ஸ்.

கோடை சீசன் காலத்தில் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு விஜயம் செய்கின்றனர். உதகையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா.

ஒரு முறை வந்தவர்கள் மீண்டும் வரும் போது, அதே இடங்கள் தானா என அலுத்துக் கொள்கின்றனர். அதிகமான கூட்டம், போக்குவரத்து நெரிசல் ஒரு புறம் இருக்க, இந்த சுற்றுலா தலங்களுக்கு சென்ற வர கணிசமான தொகை கரைந்து விடும்.

இந்நிலையில், அமைதியாகவும், சிக்கனமாகவும் பொழுதை கழிக்கவும், இயற்கை எழிலை ரசிக்கவும் உதகையில் கவனம் பெறாத பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

மரவியல் பூங்கா: உதகை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது மரவியல் பூங்கா. தோட்டக் கலைத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் 60 வகையான மரங்கள் உள்ளன. அமைதியாகவும், பச்சைப் பசேலென பரந்திருக்கும் புல்வெளியும் கோடை வெப்பத்தில் கண்களுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி தரக்கூடியது.

அமைதியான சூழ்நிலை நிலவுவதால் முதியோர் ஓய்வெடுக்கவும், புத்தக பிரியர்கள் புத்தகங்கள் வாசிக்கவும் ஏற்ற இடம். இந்த பூங்காவை காண கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

தேயிலை பூங்கா: உதகை-கோத்தகிரி சாலையில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது தேயிலை பூங்கா. தொட்டபெட்டா சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா தேனிலவு தம்பதியினர் மட்டுமின்றி சுட்டிக்குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கும் நல்ல பொழுதுபோக்கு பூங்கா.

சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள். நடைபயிற்சி மேற்கொள்ள தேயிலை தோட்டத்தின் இடையே நடைபாதை என நேரம் போவதே தெரியாது. குடும்பமாக வந்து, கொண்டு வந்த கட்டுச்சோற்றை ருசிப்பது சிறப்பு. மேலும், அனைவரும் விரும்பும் தேயிலையை உற்பத்தி செய்வது குறித்து விளக்கும் அருங்காட்சியகத்தையும் கண்டு ரசிக்கலாம்.

கேர்ன் ஹில்: உதகை-பாலாடா சாலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது கேர்ன் ஹில். வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ள இந்த பகுதி இயற்கையை ரசிக்க ஏற்ற இடம். அமைதியான சூழல், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை அறிந்துக்கொள்ள வனத்துறை இங்கு தகவல் மையம் அமைத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி, ஒலி அமைப்பில் பறவைகளின் புகைப்படத்துடன் அவை எழுப்பும் ஒலியை அனுபவிக்கலாம். இயற்கை மற்றும் வன ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் பயணிப்பது பரவசம். வனத்தில் ஆங்காங்கே விலங்குகளின் மாதிரிகள், நாம் வனத்தின் உள்ளே இருக்கும் அனுபவத்தை கொடுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in