Published : 19 May 2023 06:28 AM
Last Updated : 19 May 2023 06:28 AM
சென்னை, மதுரை, திருச்சி உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ரயில்கள் மூலம் கோவைக்கும் அல்லது நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் மேட்டுப்பாளையத்துக்கும் வரலாம். அங்கிருந்து மலை ரயில் மூலம் குன்னூர் மற்றும் உதகைக்கு செல்லலாம். மேலும் கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் கோடை காலத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகளை இயக்குகிறது. குறிப்பாக கோவையில் இருந்து உதகைக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து உதகைக்கு 88 கி.மீ., மட்டுமே. மேட்டுப்பாளையத்தில் இருந்து 54 கி.மீ., தூரமும், ஈரோட்டில் இருந்து உதகைக்கு 135 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது.
உதகை வந்த பின் தங்களது வசதிக்கேற்ப தனியார் வாகனங்களின் மூலமாகவோ அல்லது சர்க்கியூட் பேருந்து எனப்படும் சுழற்சி முறையில் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களை சுற்றி வரும் அரசுப் பேருந்திலோ சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம். தனியார் வாகனங்களில் வருபவர்கள் சுற்றுலா வழிகாட்டி மூலம் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்.
தங்கும் வசதி: உதகை மற்றும் குன்னூர் பகுதியில் ஏராளமான லாட்ஜ், ஹோட்டல்கள், காட்டேஜ்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.15 ஆயிரம் வரை ஒரு அறைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்களது வசதிக்கேற்ப அறைகளை எடுத்துக் கொண்டு தங்கலாம். ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களிலேயே சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்கவும் வாகன வசதி செய்து தரப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தலங்களையும் காண்பிக்கும் பேக்கேஜ் டூர் முறையும் உள்ளது.
உணவு வகைகள்: உதகையை பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சைனீஸ், பஞ்சாபி, வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சாதாரணமாக இந்த வகை உணவுக்காக பிரத்யேக உணவகங்கள் உள்ளன. இவற்றுக்கு சென்று சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை ருசிக்கலாம். சைனீஸ் உணவுக்காக புகழ் பெற்ற ‘ஷின்க்ஹவுஸ்’ உள்ளது. இது சீன தம்பதிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT