125-வது உதகை மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம் - பல்லாயிரம் மலர்களால் தேசிய பறவை மயில் வடிவமைப்பு

உதகை தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் மலர் அலங்காரத்தை வடிவமைக்கும் பணியாளர்கள்.
உதகை தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் மலர் அலங்காரத்தை வடிவமைக்கும் பணியாளர்கள்.
Updated on
1 min read

உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்கும் 125-வது மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக பல்லாயிரம் மலர்களால் தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் இந்தாண்டு 125-வது மலர்க் கண்காட்சி நாளை (மே 19) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. சுற்றுலாப் பயணிகளை கவர 325 ரகங்களில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

மலர்க்கண்காட்சியை ஒட்டி மலர்க் காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35,000 வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தன. அவை தற்போது பூத்து குலுங்குகின்றன. இந்த தொட்டிகள் காட்சி மாடத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மலர்க்கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களால் தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், உதகை தாவரவியல் பூங்கா நிறுவப்பட்டு 175 ஆண்டுகள் மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்கப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவை பறைசாற்றும் வகையில் வடிவமைப்புகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்லாயிரம் லில்லியம்ஸ் மலர்கள் மற்றும் கொய்மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.

35 ஆயிரம் மலர்ச் செடிகள்: இதைத்தவிர, இவ்வாண்டு மலர்க் காட்சி அரங்கினுள் 35,000 பல வண்ண மலர்ச் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் காட்சி மாடங்களில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரிய வகை மலர்ச் செடிகளின் தொகுப்பு மற்றும் பல்வேறு மலர்களின் பலவகை அலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. மலர்க் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

மலர்க் கண்காட்சியை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து பார்வையிடுகின்றனர். விழாவில், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவுக்காக மேடை மற்றும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in