

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியைச் சுற்றி மரத்தினாலான வேலி போன்று தோற்றமளிக்கும் எப்ஆர்பி எனும் மெட்டீரியல்களால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் இடம் நட்சத்திர வடிவிலான ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்யவும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செல்லவும் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் ரூ.24 கோடியில் சுற்றுலாப் பயணிகளை கவர ஏரியை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏரியைச் சுற்றி 4.5 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. ஏரியில் உள்ள செடிகளை அகற்ற பிரத்யேக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ஏரி மேலே நடந்து சென்று படகு சவாரி செய்ய 160 அடி தூரத்துக்கு மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் நடுவே 3 இடங்களில் நீருற்று போல் காட்சி அளிக்கும், தண்ணீரை சுத்தப்படுத்தும் ‘வாட்டர் பில்டர்’ பொருத்தப்பட்டுள்ளது.
இது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், எரியை மேலும் அழகுப்படுத்தும் வகையில் மரத்தினாலான வேலி போன்று காட்சித்தரும் ‘எப்ஆர்பி’ எனும் மெட்டீரியல்களால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
எப்ஆர்பி எனப்படும் பைபர் வலுவூட்டப்பட்ட பாலிமர் கலவையால் செய்யப்பட்ட வேலியில் தீப்பிடிக்காது. மழை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக சிதைவு அடையாமல், பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சித் தலைவர் செல்லத்துரை கூறுகையில், புதிய வகையான வேலி ஓரிரு மாதங்களுக்குள் ஏரியைச் சுற்றிலும் அமைக்கப்படும். அதன்பின் ஏரியை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது தவிர, ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் 900 மின் விளக்குகள், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட உள்ளன என்றார்.