

சென்னை: "பெரும்பாலான மக்கள் கூடுகின்ற சுற்றுலாத் தலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அனைத்துவகை பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்து, குறைபாடுகளைக் களைந்து, முறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள தூவல் தீரம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயணித்தப் படகு கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கேரள மக்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
இந்திய ஒன்றிய அரசும், கேரள மாநில அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்பு நிதியினை வழங்குவதோடு, இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், பெரும்பாலான மக்கள் கூடுகின்ற இதுபோன்ற சுற்றுலாத் தலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அனைத்து வகை பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்து, குறைபாடுகளைக் களைந்து, முறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கேரள படகு விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.