

கோத்தகிரி: கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. 5 டன் காய்கறிகளாலான டிராகன், முதலை, யானை குடும்பம், சோளம், கம்பு அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என பல்வேறு விதமான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்வாக, கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது.
சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தாண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறு தானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் ஒன்றரை டன் அளவில் உருளைக்கிழங்கினால் ஆன கம்பு செடி, குடை மிளகாய் மற்றும் பஜ்ஜி மிளகாயினால் ஆன மக்காச்சோளம் மெகா உருவங்களாக அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், காய்கறிகளால் யானை குடும்பம், டிராகன், முதலை, லிங்கம், வரையாடு, ஒட்டகச் சிவிங்கி, இருவாச்சி பறவை, வள்ளுவர் கோட்டம், கரடி போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
உதகையின் 200-வது ஆண்டை போற்றும் வகையில் ‘ஊட்டி 200’ சின்னம் பல்வேறு காய்கறிகளினால் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், எஸ்ஏடிபி திட்ட இயக்குநர் மோனிகா ராணா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புசாமி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கண்காட்சி இன்றும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.