

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணி முடிவுறும் நிலையில், நேற்று முதல் இலகுரக வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏற்காடுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. குறிப்பாக 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு குறுகிய பாதை வழியாக வாகனங்கள் சென்று வந்தன.
இதையடுத்து, மலைப்பாதை சீரமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அயோத்தியாப்பட்டணம் அடுத்துள்ள குப்பனூர் சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. இதையடுத்து, நேற்று முதல் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனால் நேற்று அதிகாலை முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் அதிகளவில் ஏற்காடுக்கு சென்றன.
கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காடுக்கு சென்று, இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான காட்சிகளை கண்டு ரசித்தனர். குளு குளு சீதோஷ்ணம் மற்றும் சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் மகிழ்வுடன் அனுபவித்தனர்.