நடப்பாண்டு கோடை விழாவில் உதகையில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலாவுக்கு அனுமதி

நடப்பாண்டு கோடை விழாவில் உதகையில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலாவுக்கு அனுமதி
Updated on
1 min read

உதகை: கோடை சீசனையொட்டி, உதகையில் நடப்பாண்டு முதல் முறையாக ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. வரும் 19-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி இன்றும், நாளையும் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்குகிறது.

7-ம் தேதி முதல் 31-ம் தேதி தேதி வரை உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைப்பயணம், 11-ம் தேதி படகுப் போட்டி, 12, 13, 14-ம் தேதி கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி, 13, 14, 15-ம் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அசெம்பிளி திரையரங்கில் திரைப்பட விழா,

19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, 21, 22-ம் தேதிகளில் குன்னூரில் தேயிலை சுற்றுலா, 25 முதல் 31-ம் தேதி வரை மகளிர் சுய உதவிக் குழு சார்பில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கோடை விழா, 27 28-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, 31-ம் தேதி தாவரவியல் பூங்காவில் நிறைவு விழா நடைபெற உள்ளது.

இதில் சிறப்பம்சமாக வரும் 13-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உதகை நகரின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும். தனியார் நிறுவனம் மூலமாக, உதகை தீட்டுக்கள் மைதானத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும். ஒருமுறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம். அங்கிருந்து 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் சுமார் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.

விமான நிறுவன உத்தரவின்படி, சுமார் 1000 அடி உயரம் வரை பறந்து, உதகை நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருக்கலாம். ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெறலாம், தீட்டுக்கள் மைதானத்துக்கு வந்தும் அனுமதி வாங்கலாம். உதகை காலநிலையை பொறுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுப்பணி,, வனம் உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in