

உதகை: உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா வாகனங்களை நிறுத்த பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு, தங்கும் விடுதிகள், பேக்கரி, உணவக உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரியில் கோடை சீசன் தொடங்கிவிட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற சாலைகளை ஒட்டி உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை வெளியில் அழைத்துச் செல்லும் வகையில் சுற்றுலா வாகனங்களை சாலையோரம் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் என்.சி.எம்.எஸ் மைதானம், ஆவின், அசெம்பிளி தியேட்டர், திபெத்தியன் வாகன நிறுத்துமிடம், பழங்குடியினர் பண்பாட்டு மையம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவகங்கள், பேக்கரி உரிமையாளர்கள் தரமான உணவை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும்.
பாதசாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தக்கூடாது. குப்பையை வனப்பகுதிகளில் கொட்டக் கூடாது.
உள்ளாட்சி அமைப்பின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் நடமாடும் கழிப்பிடங்கள் அமைத்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும், என்றார்.
கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கோட்டாட்சியர் துரைசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) பொது மேலாளர் நடராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல கோடை விழாவின்போது போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, கோடை விழாவையொட்டி உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில், சுமார் 600 காவலர்கள் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப சுற்றுலா தலங்கள், தங்கும் விடுதிகளில் ‘சுற்றுலா தகவல் மையங்கள்’ அமைக்க சுற்றுலா துறை அமைச்சர் உத்தரவிட்டார்.