

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இன்று (மே 2) திறந்திருக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 180 வகையான இனங்களைசார்ந்த 2,500 வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது.
தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டபார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்த இரு பூங்காக்களும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவது வழக்கம். பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், இருபூங்காக்களுக்கும் அதிகஎண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள்.
எனவே, விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும், பார்வையாளர்கள் வசதிக்காக பூங்காக்கள் இன்று திறந்திருக்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.