

கொடைக்கானல்: தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தனர். நகரின் நுழைவாயில் இருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் இடங்கள் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த வாரத்தில் சனி, ஞாயிறுமற்றும் திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் திரண்டு வந்தனர்.
இதனால், கொடைக்கானல் நகரின் நுழைவாயிலில் இருந்து பிரையன்ட் பூங்கா, குணாகுகை, ரோஸ் கார்டன், மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் பாரஸ்ட்உள்ளிட்ட சுற்றுலா இடங்களில்பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்தும் மகிழ்ந்தனர்.
வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். கொடைக்கானலில் நேற்று இதமான தட்ப வெப்பநிலை நிலவியது. மேகங்கள் தரையிறங்கி வந்து தழுவிச் சென்ற காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர்.
மாலையில் லேசான சாரல் பெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பின. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.