

கொடைக்கானல்: கோடை விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகளால், நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை தடுக்க, நாளை (மே 1) முதல் 20 கி.மீ. சுற்றுப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு வெளி மாவட் டம், வெளி மாநிலங்களில் இருந் தும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்று காலை முதலே வெளியூர்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், கொடைக்கானல் நகருக்குள் நுழைய முடியாமல், மலைச் சாலையில் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
நகர் பகுதி மற்றும் சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் சிரமத்துக்குள்ளாகினர். பிரையன்ட் பூங்கா, மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், ரோஸ் கார்டன், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்று லாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
ஒரு வழிப்பாதையாக மாற்றம்: மே மாதம் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரி சலை தவிர்க்க, நாளை (மே 1) முதல் 20 கி.மீ. சுற்றுப் பகுதியில் உள்ள 12 சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட உள்ளன.
மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாவட் டத்தின் பிற பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீஸாரை வரவழைத்து, சுழற்சி முறையில் பணியில் ஈடு படுத்தப்பட உள்ளனர். இதற்கிடையே, நகர் பகுதி மற்றும் சுற்றுலா இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர்.