

உதகை: ரம்ஜான் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களையொட்டி உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரம்ஜான் மற்றும் பள்ளி விடுமுறையை ஒட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வருகை புரிந்தனர்.
உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான தாவரவியல் பூங்காவில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை ஒட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில் 40 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் சைக்ளோமன், பிக்கோனியா, பெட்டுனியா, கிரை சாந்திமம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் பல்வேறு வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
அதேபோல் பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளி மைதானங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். ரம்ஜான் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உதகை நகரின் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.