சுற்றுலா பயணிகளை கவரும் ‘உதகை 200’ ஓவியங்கள்

சுற்றுலா பயணிகளை கவரும் ‘உதகை 200’ ஓவியங்கள்
Updated on
1 min read

உதகை: உதகை 200-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தலங்களில் ஓவியம் வரையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு உதகையை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு உதகையை உருவாக்கி வெளி உலகத்துக்கு கொண்டு வந்தார். அப்போது, உதகை நகரம் மற்றும் ஏரி உருவாக்கப்பட்டது.

மேலும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராகவும் அவர் இருந்தார். இதனால் ஜான் சல்லிவன் நீலகிரியின் தந்தை என்று போற்றப்படுகிறார். கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் உதகை நகரம் உருவாகி 200-ம் ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன்படி சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் அடுத்த மாதம் நடைபெறும் நிறைவு விழா, மலர் கண்காட்சி உட்பட பல்வேறுநிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கஉள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரவும், முதல்வரை வரவேற்கும் விதமாகவும் உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலக சாலை, படகு இல்லம், பிங்கர் போஸ்ட், தாவரவியல் பூங்கா சாலை உட்பட பல்வேறுஇடங்களில் தடுப்புச்சுவர்களில், புலி, சிறுத்தை, யானை, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் ஓவியங்களை வரையும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

இந்த ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளதால், அவற்றின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in