

விருத்தாசலம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தை ரூ.14.07 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
2021-22-ம் நிதி ஆண்டிற்கான சட்டப்பேரவை சுற்றுலாத்துறை கோரிக்கையில், சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத் தலங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், “பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளாக பார்வையாளர் மையம் (முதல் மற்றும் 20-ம் தளங்கள்), பார்வையாளர் ஒய்வு அறை, முன்பதிவு மையம், 56 நபர்கள் அமரக்கூடிய வகையில் உணவகம், 10 எண்ணிக்கையிலான குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை,
நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்து மிடம், குழந்தைகள் விளையாட்டு கூடம் மற்றும் ரவுண்டானா போன்ற பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற் பொறியாளர் முனுசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.