உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்

உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்
Updated on
1 min read

உதகை: உதகை - குன்னூர் இடையே நேற்று முதல் தொடங்கிய சிறப்பு மலை ரயிலில் பயணித்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வரும்போது, மலை ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றமடைகின்றனர்.

இதையடுத்து, சீசனின்போது சிறப்பு மலை ரயிலை இயக்க சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. காலை 8.10 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, உதகைக்கு 9.40 மணிக்கு வந்தடைந்தது.

சிறப்பு மலை ரயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 120 பேர் பயணம் செய்தனர். இதேபோல, உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, 5.55 மணிக்கு குன்னூர் சென்றடைந்தது. இதில் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.630, இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூ.465 வசூல் செய்யப்படுகிறது.

இதுதவிர, உதகையில் இருந்து கேத்திக்கு காலை 9.45, 11.30, மதியம் 3 மணிக்கும், கேத்தியில் இருந்து உதகைக்கு காலை 10.10, மதியம் 12.10, 3.30-க்கும் நேற்று முதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை, வாரத்தில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது. ஜூன் 26-ம் தேதி வரை இந்த சேவை இருக்கும்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, உதகைக்கு 2.25 மணிக்கு வந்தடையும். இதேபோல, உதகையில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மதியம் 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதற்கிடையே சிறப்பு ரயில் சேவை அல்லாது, வழக்கமாக இயங்கும் மற்ற ரயில் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, "மலை ரயில் வனப்பகுதிகள் வழியே குகைகளை கடந்து வந்தது புதிய அனுபவமாக இருந்தது. தேயிலை தோட்டங்கள், பசுமையான மரங்கள், வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இயற்கை அழகை கண்டு ரசித்தோம்" என்றனர். சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், அதன் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in