

கொடைக்கானல்: கோடை சீசனையொட்டி கொடைக்கானலில் படகுகளை சீரமைத்து, வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கொடைக்கானலுக்கு கோடை சீசனையொட்டி தற்போதே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். கொடைக்கானலில் மையத்தில் அமைந்துள்ள 59 ஏக்கர் பரப்பளவிலான நட்சத்திர வடிவ ஏரியில், சுற்றுலாத்துறை மற்றும் நகராட்சி மூலம் 100-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கொடைக்கானலில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
அதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவர். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக படகு குழாம் உள்ளது. அங்கு மோட்டார், துடுப்பு படகுகள், இருவர், நான்கு பேர் மற்றும் தானாக ஓட்டிச் செல்லும் பெடல் படகுகள் உள்ளன.
கோடை சீசனையொட்டி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும், பாதுகாப்பாக சவாரி செய்யவும் படகுகளை சீரமைத்து, வண்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.