

விருதுநகர்: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் பாரத் கவுரவ சிறப்பு ரயில் சுற்றுலா மே 4-ம் தேதி புறப்படுகிறது.
இதுகுறித்து தென்னரக ரயில்வே துணை முதுநிலை மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், தென்மண்டல ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக குழு பொது மேலாளர் ரவிக்குமார், துணை பொதுமேலாளர் (சுற்றுலா) சுப்பிரமணி ஆகியோர் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு பாரத் கவுரவ சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குளிர் சாதன பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பேட்டரி கார் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. "புண்ணிய தீர்த்த யாத்திரை" என்ற பெயரில் இந்தச் சுற்றுலா பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மே 4-ம் தேதி தொடங்கி 11 நாள்கள், 12 இரவுகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
கோச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக விஜயவாடா வரை செல்லும். பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி சென்று அப்பகுதிகளில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவர்.
குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, தங்குமிடம், உள்ளூரில் பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி, தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி, குடிநீர், காப்பீட்டு என அழைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். குளிர்சாதன பெட்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.35,651-ம், சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.20,367-ம் கட்டணம் ஆகும்.
ஆன்லைன் மூலம் இதற்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 700 பேர் செல்லக் கூடிய இச்சுற்றுலா பயணத்திற்கு இதுவரை 472 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.