

கொடைக்கானல்: 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். இதனால், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கும் முன்பே வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
நேற்று புனித வெள்ளி மற்றும் இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. இதன் காரணமாக நேற்று காலை முதலே கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
கொடைக்கானல் நகருக்குள் நுழைய நகராட்சி சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், மோயர் பாய்ன்ட், தூண் பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் சென்றும் மகிழ்ந்தனர்.
தரைப்பகுதியில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கொடைக்கானலில் நிலவிய இதமான தட்ப வெப்பநிலை, இயற்கை எழிலோடு தரையிறங்கி வந்து தழுவிச் சென்ற மேகக் கூட்டங்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பின. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் வலம் வந்ததால் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.