

சேலம்: தொடர் விடுமுறையையொட்டி, ஏற்காடு, ஆனைவாரி முட்டல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்களில் கோடை வாழிடங்கள், நீர் நிலை கொண்ட சுற்றுலாத் தலங்களுக்கு ஆர்வத்துடன் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாளாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சேலத்தை அடுத்த ஏற்காடு கோடை வாழிடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.
சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்ததால் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. வாகனங்கள் அணி வகுத்து செல்வது போல சென்றன. ஏற்காட்டில் படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரிப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மலர்ச்செடிகளையும், இயற்கையையும் ரசித்தபடி பொழுதை கழித்தனர்.
பகோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மஞ்சக்குட்டை காட்சிமுனை, சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. ஏற்காடு கிள்ளியூர் நீர் வீழ்ச்சி, மஞ்சக்குட்டையை அடுத்த நல்லூர் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
இதனிடையே, ஆத்தூரை அடுத்த ஆனைவாரி முட்டல் சுற்றுலாத் தலத்திலும் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். அங்குள்ள முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிப் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும், ஆனைவாரி முட்டல் அருவியில் கொட்டும் நீரில், வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர்.