சுட்டெரிக்கும் வெயிலால் தேக்கடி ஏரிக்கு தாகம் தணிக்க வரும் மான்கள்: ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
கூடலூர்: சுட்டெரிக்கும் வெயிலால் தேக்கடி ஏரியின் கரைப்பகுதிக்கு மான்கள் அதிகளவில் நீர் அருந்த வருகின்றன. படகு பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை நீர்தேக்கத்தின் ஒரு பகுதியில் தேக்கடி படகு குழாம் அமைந்துள்ளது. இங்கிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. காட்டுப்பகுதியில் இருந்து விலங்குகள் ஏரிக்கரையில் நீர் அருந்த வருவது வழக்கம். அதை சுற்றுலாப் பயணிகள் படகில் இருந்தபடியே ரசித்து மகிழ்வர்.
தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால், கடந்த ஒருவாரமாக மான்கள் அதிக அளவில் கரைப்பகுதிக்கு வந்து செல்கின்றன. மேலும் காட்டுப்பன்றி, காட்டுமாடு, குரங்குகளும் வருகின்றன. அப்போது படகுகளை சில நிமிடங்கள் நிறுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு வன விலங்குகளை காட்டுகின்றனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், தற்போது யானைகள் வரத்து குறைவாகவே உள்ளது. தூரத்தில் உள்ள விலங்குகளை பார்க்க பைனாகுலர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 கட்டணம் பெறப்படுகிறது. இதன் மூலம் விலங்குகளை தெளிவாக பார்க்கலாம் என்றனர்.
