

உதகை: பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையை அனுபவிக்க வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்துகோடை விடுமுறை விடப்படும். இந்த விடுமுறையை கொண்டாடவும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறார்கள்.
இங்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீஸார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உதகை சிறுவர் மன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் தலைமை வகித்து பேசும்போது, "கோடை காலம் தொடங்கிவிட்டதால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். உதகையை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல், மக்கள்அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சினையாகும். மாவட்டத்தில் சுமார் 2000 ஆட்டோக்கள் இயங்குகின்றன.
எனவே, போலீஸாருக்கு கொடுப்பதுபோல, உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதேபோல, போலீஸாருடன் நடந்த கூட்டத்தில் பேசும்போது, "பலதரப்பட்ட இடங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகள் தகவல்கள் கேட்டால், அவர்களுக்கு சரியான முறையில் விளக்கம் அளித்து உதவி செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும். சுற்றுலா பயணிகள் விலை உயர்ந்த பொருட்களை வாகனங்களில் வைத்து செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.