

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல்லில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
அருவிகள், தொங்குபாலம், நடைபாதைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. சுற்றுலாப் பயணிகள் எண்ணை மசாஜ் செய்து, மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர்.
பெரும்பாலான பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். இன்னும் சில நாடகளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் வரும் நாட்களில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும்.
இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல்ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியா பாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 3ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.