கோவையில் அமையும் செம்மொழிப் பூங்காவில் 16 வகை பூங்கா, 3 வகை வனங்கள்

கோவையில் அமையும் செம்மொழிப் பூங்காவில் 16 வகை பூங்கா, 3 வகை வனங்கள்
Updated on
1 min read

கோவை: கோவையில் செம்மொழிப் பூங்கா 16 வகையான பூங்காக்கள், 3 வகை வனங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறையை இடம் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் செம்மொழிப் பூங்காவுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப் பட்டது. இடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செம்மொழிப் பூங்கா திட்டப் பணி மீண்டும் தீவிரப் படுத்தப்பட்டது.

மாநகராட்சி வசம் உள்ள சிறை இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்க தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு சிறப்பம்சங்களுடன் 2 கட்டங்களாக செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 45ஏக்கரிலும், இரண்டாம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும். இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையிலும்,மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுது போக்குக்கு அளிக்கும் வகையிலும் உலகத் தரத்தில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பூங்காவில் வரலாற்று சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சிவனம், செம்மொழி வனம், மர வனம் ஆகியவை அமைகின்றன. பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்தப் பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகைப் பூங்கா போன்ற 16 வகையான பூங்காக்கள் கலைநுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளன.

இப்பூங்கா வளாகத்தில்விழா நடத்துவதற்கான மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in