‘டூம் டென்ட்’, படகு சவாரி, மலையேற்றம் என பச்சமலையில் சூழல் சுற்றுலாவுக்கு புத்துயிரூட்ட முயற்சி

எழில் மிகுந்த பச்சமலை
எழில் மிகுந்த பச்சமலை
Updated on
2 min read

திருச்சி: பச்சமலையில் சூழல் சுற்றுலா திட்டத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக சாகச விளையாட்டுகள், படகு சவாரி, டூம் டென்ட், ட்ரக்கிங் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான திட்டங்களின் கருத்துருக்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள பச்சமலைக்கு, சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் கடந்த 2013-ல் ‘பச்சமலை சூழல் சுற்றுலா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.2.30 கோடி செலவில் அருவிகள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்துவது, காட்சி கோபுரங்கள் அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல், மர உச்சி வீடுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு கோடை காலங்களிலும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவுவதால், திருச்சி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் குடும்பம், குடும்பமாக வந்து சென்றனர். ஆனால், காலப்போக்கில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த வனத்துறையினர் போதிய ஆர்வம் காட்டவில்லை. மேலும் குண்டும், குழியுமாக மாறிய பச்சமலை சாலை 10 ஆண்டுகளுக்கும் மேல் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் யாரும் செல்லாததால் பச்சமலை சூழல் சுற்றுலா திட்டம் முடங்கியது.

தனிக்கவனம் செலுத்தும் ஆட்சியர்: இந்த சூழலில் திருச்சி மாவட்ட ஆட்சியராக மா.பிரதீப்குமார் பொறுப்பேற்ற பிறகு, பச்சமலை மீது தனிக்கவனம் செலுத்த தொடங்கினார். அங்குள்ள பழங்குடியின மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 100 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். மேலும், ஆண்டுக்கணக்கில் பராமரிப்பின்றி கிடந்த பச்சமலை சாலையை பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து ரூ.8.53 கோடி நிதி பெற்று புதுப்பிக்கும் பணிக்கு வழிவகுத்தார்.

அதைத்தொடர்ந்து, முடங்கிக் கிடக்கும் பச்சமலை சுற்றுலா திட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக வருவாய்த் துறை, வனத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை, சுற்றுலாத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் 10-க்கும் மேற்பட்ட முறை பச்சமலைக்குச் சென்று ஆய்வு செய்தார். அதன்பலனாக, பச்சமலை சுற்றுலா மேம்பாட்டுக்கான சில முக்கியத் திட்டங்களின் கருத்துரு தற்போது அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரோப் கார், பங்கி ஜம்ப்: குறிப்பாக கோரையாறு அருவியில் குளித்து மகிழும் வகையில் அங்கு செல்வதற்கு சாலை வசதி, வாய்க்கால் மீது நடை மேம்பாலம் மற்றும் ரோப் கார், பங்கி ஜம்ப், கிளிம்பிங் லஸ்ம்போர்க் சுவர் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கான வளாகம் அமைக்கவும், குடும்பத்துடன் தங்கியிருந்து பச்சமலையின் அழகை ரசிக்கும் வகையில் 5 இடங்களில் கண்ணாடி போன்ற அறைகள் (டூம் டென்ட்) அமைக்கவும் சுற்றுலாத் துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் கால குதிரைப் பாதை: இது தவிர, தண்ணீர்பள்ளம் கிராமத்திலுள்ள குளத்தை ஆழப்படுத்தி படகு சவாரி வசதி ஏற்படுத்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் இருந்தும், அதன் அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா உருவாக்க ஊரக வளர்ச்சித் துறையிலிருந்தும் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், வனத் துறை சார்பில் டாப் செங்காட்டுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மரக்குடில்கள், காட்சிக் கூடம், உணவகம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை புதுப்பிக்கவும், காளியம்மன் கோயில் திட்டு (3 கி.மீ), மாமரத்து சோலை (7 கி.மீ) மலையேற்றப் பாதைகள், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கானப்பாடி குதிரைப்பாதை(5 கி.மீ) ஆகியவற்றை சீரமைக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மானிய கோரிக்கையில் அறிவிப்பு?: சுற்றுலாத் துறை மூலம் ரூ.5.06 கோடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ரூ.2.66 கோடி மற்றும் இதர துறைகளின் பங்களிப்புகளுடன் ரூ.10 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால் பச்சமலை சூழல் சுற்றுலா திட்டம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.

எனவே, நிகழ் மானியக் கோரிக்கை கூட்டத் தொடரில் (வனத் துறை ஏப்.13, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஏப்.18, சுற்றுலாத் துறை ஏப்.19) இவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க் கின்றனர். இத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால் பச்சமலை சூழல் சுற்றுலா திட்டம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in