விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலப் பணிகள் ஜனவரி 2024-ல் நிறைவு

விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை
விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை
Updated on
1 min read

சென்னை: கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கும் பணி ஜனவரி 2024-ல் நிறைவு பெறும் என்று நெடுஞ்சாலைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு கடல் நடுவே பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அதற்கு அடுத்த பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலா பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சங்களாகும். இங்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தா, குகன், பொதிகை ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி இழையினாலான கூண்டுப்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும்.

இந்நிலையில், இந்தப் பணிகள் ஜனவரி 2024-ல் நிறைவு பெறும் என்று நெடுஞ்சாலைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு கடல் சார் வாரியம் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் சிறப்புமிக்க நவீன கடல்சார் பாதசாரிகள் பாலத்தை மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவியுடன் சாகர் மாலா திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறது. இதில் முதல் நிலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024-ல் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in